விபத்தில் சிக்கிய குடும்பம்; தாய் மரணம்; ஆபத்தான நிலையில் பிள்ளைகள்
புத்தளம் - கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையை பார்த்துவிட்டு திரும்புகையில் சோகம்
சம்பவத்தில் ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்த்துவிட்டு தனது மூன்று பிள்ளைகளுடன் , ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறியுடன் மோதி அவர்கள் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது வீதியில் கவிழ்ந்ததில் லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அதேவேளை , மோட்டார் சைக்கிளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த , தான் புத்தளத்திலிருந்து ஆனமடுவைக்கு பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளதாக கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.