நீண்ட நாட்களாக மக்களை ஏமாற்றிய போலி வைத்தியர்!
இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
வைத்தியராகும் தகுதியற்றவர்
அதோடு இரண்டு பெயர்களில் போலி வைத்தியர் தோன்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உளவாளி ஒருவரை பயன்படுத்தி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர் வசம் இருந்த போலி முத்திரைகள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை கைதான நபர் வைத்தியராகும் தகுதியற்றவர் எனவும் இதற்கு முன்னர் வைத்தியர் ஒருவரின் கீழ் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.