தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!
ஏ-9 வீதியில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் செல்வபுரம், பளையை சேர்ந்த 19 வயதான குணாளன் மதுஜா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதி மாலை 04.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தையல் வேலை பழகுவதற்கு புதுக்காட்டு பகுதிக்கு சென்று வரும் குறித்த யுவதி வழக்கம் போன்று பஸ்ஸில் இத்தாவில் பகுதியில் வந்து இறங்கி வீதியின் வலது பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மத்திய கோட்டை தாண்டி வீதியின் வலதுபக்கமாக நடந்து சென்ற யுவதியை பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, உடனடியாகவே பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக 5.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினமே இரவு 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (23-11-2023) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் யுவதியின் உடல் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.