வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
ஹெம்மாதகம, கினிஹப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹெம்மாதகமையிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் அதிஷ மதுஷிக விமலசேன என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுவனுடன் பாட்டி மட்டுமே வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது உயிரிழந்த சிறுவன் தனது பாட்டியிடம் தீப்பெட்டி ஒன்றை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றதன் பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்த போதிலும், சிறுவன் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல நாட்களாக வீட்டின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த பெற்றோல் காரணமாக உடனடியாக தீப்பரவியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் ஹெம்மாதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.