விண்ணை முட்டும் தங்கம் விலை; சாமான்ய மக்களை ஈர்க்க அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்!
உலகில் நாளுக்கு நாள் தங்கம் விலை உச்சமடைந்து வரும் நிலையில் சாமன்ய மக்களுக்கு தங்கம் வாங்கமுடியாத அளவுக்கு உள்ளது.
இந்நிலையில் சாதாரண மக்களும் தங்கம் வாங்க இந்திய மத்திய அரசு, 9 காரட் தங்கத்திற்கு ஹால்மார்க் சான்று வழங்கியுள்ளது .
9 காரட் தங்கத்தின் சாதக பாதகங்கள்
ஒரு ஆபரணத்தில் தங்கம் எவ்வளவு கலந்துள்ளது என்பதை வைத்து 24, 22, 18, 14 என காரட் அலகில் தங்கம் வகைப்படுத்தப்படுகிறது. இதில் 24 கேரட் சுத்த தங்கம், விலை அதிகம்.
22 காரட் ஆபரண தங்கம் அதைவிட விலை குறைவு. இப்படியாக 14 காரட் தங்கம் வரை ஆபரணம் செய்து விற்க ஹால்மார்க் சான்று வழங்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கமே ஒரு கிராம் 10 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது.
அதனால் எளிய மக்களும் தங்க நகைகள் வாங்கிக் கொள்வதற்காக 9 காரட் தங்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
9 காரட் அடமானம் வைக்க முடியாது
இந்த 9 காரட் தங்கத்தில் 37 சதவீதம் தங்கமும், 63 சதவீதம் பிற உலோகங்களும் கலந்து நகைகள் செய்யப்படுவதால் இதன் விலை கிராமுக்கு ரூ.3800 என்ற அளவில் உள்ளது.
இந்த தங்கம் நகைகளாக அணிய ஏற்றது என்றாலும், 22 காரட் நகைகளை விட பொலிவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் கவரிங்கை விட பொலிவாக இருக்கும். இந்த 9 காரட் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியாது.
ஆனால் 22 காரட் நகைகளை போலவே இவற்றை நகைக்கடைகளில் அன்றைய விற்பனை விலைக்கு விற்க, புதிய நகைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகின்றது.