அவர் இல்லையென்றால் என்னால் இங்கு பேசி இருக்க முடியாது! முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட “800” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது.
இந்த நிலையில் அது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (21-09-2023) கொழும்பில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் முத்தையா முரளிதரன் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன்,
“முதலில் என் சகோதரர் அர்ஜுனனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் கவனித்துக்கொண்டார். அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கேப்டன் கூட அவ்வாறு செயற்படவில்லை. அதை செய்யவும் முடியாது.
இந்தப் படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
"இலங்கையில் உள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள். அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும்." என்றார்.