பேஸ்புக்கால் 9 கோடியை இழந்த 80 வயது முதியவர் ; பெண்கள் செய்த சம்பவம்
மும்பையில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் பேஸ்புக்கில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றதால், 9 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அந்த நபர் ஷார்வி என்ற பெண்ணுக்கு தமது பேஸ்புக்கில் இருந்து நண்பர் கோரிக்கையை அனுப்பியுள்ளார்.
இருவருக்கும் ஒருவரையொருவர் முன்னதாக எவ்வித பழக்கமும் கிடையாது. ஆனால் அவரது நண்பர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, அந்த முதியவருக்கு ஷார்வியின் கணக்கிலிருந்து ஒரு நண்பர் கோரிக்கை வந்தது.
9 கோடி மோசடி
அதை அந்த முதியவரும் ஏற்றுக்கொண்டார். இருவருக்கும் பின்னர் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர். நாளடைவில் பேஸ்புக்கிலிருந்து வட்ஸ் அப்பில் பேசத் தொடங்கினர்.
தனது கணவரிடமிருந்து பிரிந்து இருப்பதாகவும், தனது குழந்தைகளுடன் வசிப்பதாகவும் ஷார்வி, 80 வயதான நபரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் குறித்த முதியவரிடம் படிப்படியாக ஷார்வி பணம் கேட்கத் தொடங்கியுள்ளார். தனது குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் முதியவரிடம் கூறியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, கவிதா என்ற பெண்ணும் அந்த முதியவருக்கு வட்ஸ் அப்பில் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளார். தாம், ஷார்விக்குத் தெரிந்த ஒருவர் என்று அந்தப் பெண் தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார். நண்பரான பின்னர் அந்த முதியவருக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார். அதனை வைத்து மேலும் பணம் கேட்கவும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அதேவருடம் ஷர்வியின் சகோதரி என பெண் ஒருவரும், அவரது நண்பி என மற்றொரு பெண்ணும் குறித்த முதியவருக்கு வட்ஸ் அப்பில் அறிமுகமாகியதுடன் பணம் கேட்கத் தொடங்கியுள்ளனர். அந்த முதியவர் தமது பணத்தை திருப்பி கேட்ட போது ஷர்வியுடனான வட்ஸ் அப் உரையாடல் என்பனவற்றை வைத்து அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
முதியவரும், தமது மருமகளிடம் இருந்து 2 இலட்சம் ரூபாவையும், மகனிடம் இருந்து 5 இலட்சம் ரூபாவையும் பெற்று, அந்த பெண்களுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து தந்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரது மகன் ஆராய்ந்து பார்த்ததில், தமது தந்தை இணைய மோசடியில் சிக்கியிருப்பது அறியவந்தது.
பின்னர் பொலிஸ் நிலையத்திலும் இந்த மோசடி குறித்து முறைப்பாடளிக்கப்பட்டது. இந்தநிலையில் 2023 ஆண்டு ஏப்ரல் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான இரண்டு ஆண்டுகளில், அந்த முதியவர் 734 ஒன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் 9 கோடி ரூபாவை இழந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் தங்களை பெண்களாக அறிமுகப்படுத்திக் கொண்ட நால்வரும், ஒரே ஆணா அல்லது 4 பெண்களா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.