தெற்கு கடற்பகுதியில் தீப்பிடித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 7 மீனவர்கள்!
இலங்கைக்கு தெற்கே சுமார் 58 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீப்பிடித்த படகொன்றிலிருந்து 7 மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நாடளாவிய ரீதியில் கடற்பகுதிகளில் விசேட ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்போதே குறித்த 7 மீனவர்களும் இன்று காலை சனிக்கிழமை (12.08.2023) மீட்டுக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்த விசாரணையின் போது இவர்கள் ருஹுனு குமாரி 6 எனும் மீன்பிடி இழுவை படகு மூலம் கடந்த (08.08.2023) ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு மேற்கு கடற்பகுதியின், காலி கடற் பகுதியில் இருந்து சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படகு தீப்பிடித்துள்ளது.
குறித்த அனர்த்தம் தொடர்பாக அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த கடற்படையினர் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களை தீப்பிடித்த படகிலிருந்து பத்திரமாக இடமாற்றம் செய்து, காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.