கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்திற்கு 600 மில்லியன் நிதி
கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதற்கட்டமாக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாலத்தை அமைப்பதற்காகத் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் முதல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்ததாக ரவிகரன் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாலம் அமைப்பதற்கான சாத்தியவள ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆய்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் பின்னர், தற்போது 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீட்டிற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்