6 வயது சிறுவனின் உயிரை பறித்த மின்னல்: புத்தளத்தில் சோக சம்பவம்
புத்தளம் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் புத்தளத்தில் ஆனமடுவ - பாலியாகம பகுதியில் நேற்று (30) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆனமடுவ – பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கிய சிறுவனை உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சிறுவனின் சடலம் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பீ.சி.ஆர். பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.