ராஜபக்ஷக்களால் 6 இலட்சம் பேருக்கு நேர்ந்த நிலை: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சம்பிக்க!
கடந்த ஒரு ஆண்டுக்குள் ராஜபக்ஷர்களினால் மாத்திரம் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக 43 ஆவது படையணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,
தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் மே தின கூட்டத்தில் ராஜபக்ஷர்கள் கருத்துரைக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.
நாட்டு மக்களின் தொழில் உரிமை,நிம்மதியாக வாழும் உரிமை ஆகியவற்றை இல்லாதொழித்த ராஜபக்ஷர்கள் இன்று உழைக்கும் மக்களின் உரிமை பற்றி பேசுகிறார்கள்.தங்களின் அரசியல் நோக்கத்துக்காக தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து விட்டோம் என கருத முடியாது.
வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாத காரணத்தால் இந்த சேவை கட்டமைப்பில் தற்காலிக நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளது.
நிலுவையில் உள்ள கடன்களினால் பாரிய நெருக்கடிகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.