பிள்ளையாருக்கு படைத்த லட்டு ஒன்று ரூ.1.01 கோடிக்கு ஏலம்!
விநாயகர் சதுர்த்திக்கு, ஐதராபாத்தில் (Hyderabad) பூஜைக்காக வைக்கப்பட்ட லட்டு ஒன்று சுமார் ரூ.1.01 கோடிக்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஒவ்வொரு இடங்களிலும் மிகவும் வித்தியாசமான முறையிலும், பிரம்மாண்டமான முறையிலும் நடைபெற்று வந்த நிலையில், ஒற்றை லட்டு ரூ.1.01 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 கிலோ எடை கொண்ட லட்டு
தெலங்கானா மாநிலம், ஐதராபாத், பந்தல்குடா ஜாகீர் பகுதியில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் சிலைக்கு நைவேத்தியமாக சுமார் 5 கிலோ எடை கொண்ட லட்டு படைக்கப்பட்டுள்ளது .
குடியிருப்பு வாசிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தான், சக்திமான் குழு என்ற குடியிருப்பாளர்கள் சுமாட் ரூ.1.01 கோடிக்கு அந்த லட்டை ஏலத்திற்கு எடுத்துள்ளனர்.

அதேவேளை 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இந்த பகுதியில் 10 கிலோ அளவிலான லட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.
அந்த லட்டு இதனை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது, சுமார் ரூ.2.32 கோடிக்கு அந்த ஒற்றை லட்டு விற்பனை செய்யப்பட்டது.