இலங்கைக்கு அக்கினி பரீட்சையாக அமையவுள்ள 51ஆவது ஜெனிவாத் தொடர்!
2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரே இலங்கைக்கு சவால்மிக்கது என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனவே, உரிய வழிகாட்டல் பொறிமுறையுடனேயே குறித்த தொடரை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் அடுத்து என்ன நடக்கும் என்பது இத்தொடரிலேயே தெரியவரும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்கு முதுகெலும்புடன், துணிவுடன் எதிர்கொண்டோம். சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன. இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன.
இன்னும் செய்ய வேண்டியுள்ளன எனவும் சுட்டிக்காட்டின. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் – அதாவது 2022 செப்டம்பரில் நடைபெறும் கூட்டத்தொடர் எமக்கு சவால்மிக்கது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் முழுமையானதொரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இலங்கையால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அதில் மீளாய்வு செய்யப்பட்டிருக்கும்.
46/1 தீர்மானத்தின் கால எல்லையும் செப்டம்பருடன் முடிவடைகின்றதாகவும் எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். எனவே, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதும் இங்கு தீர்மானிக்கப்படும்.
இனை அனுசரணை வழங்கிய நாடுகள் மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவருமா அல்லது இலங்கைக்கு அவகாசம் வழங்கப்படுமா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் சிறந்த வழிகாட்டல் அறிக்கையை நாம் முன்வைக்க வேண்டும். இரு வருடத்துக்குள் இந்தெந்த காலப்பகுதியில், இந்தெந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதை விவரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.