தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தல்
சீன அரசாங்கத்தினால் தேடப்பட்டு வந்த 5 சீனப் பிரஜைகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில், சீன அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்ட விதிகளை மீறி நாட்டில் தங்கியிருந்துள்ளனர்.

நாடு கடத்தல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 சீனப் பிரஜைகளும் வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சீனாவிற்குச் செல்லும் இரண்டு விமானங்கள் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் 8 அதிகாரிகளின் பாதுகாப்புடன் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் முதலாவது குழுவாக 3 சீனப் பிரஜைகள், 5 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புடன் நேற்று இரவு 8.50 மணியளவில் சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான MU-6018 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஷாங்காய் நகரத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.
அதேபோன்று, நேற்று இரவு 10.25 மணியளவில் எயார் சைனா விமான சேவைக்குச் சொந்தமான CA-426 என்ற விமானமூலம் எஞ்சிய 2 சீனப் பிரஜைகளும் 3 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புடன் சீனாவின் செங்டு நகரத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 5 சீனப் பிரஜைகளும் தற்போது சீனாவின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான விமானப் பயணக் கட்டணங்களைச் சீன அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.