திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 35 பேர்
பொரளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11) பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா கலந்த மதனமோதகங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளும் பறிமுதல்
மேலும், 02 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் 19 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 26,75,440 ரூபாவும், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 2,15,000 ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்