முச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்ட பெண் உட்பட மூவர் கைது
பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டு வந்த பெண் உட்பட மூவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஹடுதுவை - பொல்கஸ்ஸோவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்களில் மிளகாய் பொடியை தூவி கொள்ளை
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர்களில் ஒருவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கலவானை மற்றும் கஹதுடுவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்களும் 29 வயதுடைய பெண்ணும் ஆவர்.
சந்தேக நபர்கள் மூவரும் கஹதுடுவை, பொரலஸ்கமுவ , மொரகஹஹேன ஆகிய பிரதேசங்களில் சாரதிகளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட 4 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்