விடுதி உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கொலை; பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு
காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலைச்சம்பவம் தொடர்பில், தொலைபேசி தரவு பகுப்பாய்வு மற்றும் சிசிடிவி காணொளி காட்சிகளின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணை
கடந்த 30 ஆம் திகதி காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் சுடப்பட்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்குமிடத்தின் உரிமையாளர் என்றும், ஹினிதும மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பண பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.