தமிழர் பிரதேசத்தில் இரகசிய தகவலால் சிக்கிய மூவர்!
அம்பாறை மாவட்டத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, அம்பாறை பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முதல் சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இருவருக்கும் போதைப்பொருளை விநியோகித்த பொல்வக காலனியைச் சேர்ந்த 23 வயதுடைய பிரதான சந்தேகநபரிடமிருந்து 2,500 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.