உடற்பயிற்சியின் போது 26 வயதான பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!
சென்னையில் உடற்பயிற்சி செய்யும் போது 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான அன்விதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அன்விதா, நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்றிரவு உடற்பயிற்சி கூடத்தில் வார்ம்-அப் செய்து கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றொரு மருத்துவர் அன்விதாவுக்கு முதல் சிகிச்சை அளித்துள்ளார்.
உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே அன்விதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிரிவி காட்சிகளை கைப்பற்றி கீழ்பாக்கம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.