23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக வழக்கு
காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கை
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்தகங்களை இலக்கு வைத்து விசேட விசாரணைகளும் சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணைகளின் போது பொதுமக்களின் வாழ்க்கையிலும் சுகாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல தீவிர முறைகேடுகள் நுகர்வோர் சேவை அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.