23,270 குற்றச்சாட்டுக்கள் ; 220 ஆண்டு சிறைத் தண்டனை; சிறை சென்ற குற்றவாளிகள் வெளியிட்ட தகவல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேருக்கும், தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தீர்ப்பளித்தது.
இதன் போது சிறைச்சாலை பேருந்தில் ஏறியநிலையில் குற்றவாளிகள் குறித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
அநியாயமான தீர்ப்பு
அதில் இரு குற்றவாளிகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறியநிலையில் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான அநியாயமான தீர்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தண்டனை பெற்ற நபர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவர்களுக்கான தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்து பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாத கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.