14 நாட்கள் கட்டுப்பாடு போதாது! சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, நேற்று மாலை, விடுக்கப்பட்டன.
மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தளர்வின்றி தொடர்ச்சியாக 19 நாள்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்கத்தின் பின்னர், பயணக் கட்டுப்பாடுகள் மே.21ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டு, அத்தியாசிய தேவைகளுக்காக மே.25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது.
மே.31, ஜூன் 4 ஆகிய திகதிகளிலும் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.எனினும், அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட “நிவாரண நாளில்” மக்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சுகாதார தரப்பினரும், கொவிட-19 தொற்றொழிப்பை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியும் கடுமையான அதிருப்தியை கொண்டிருந்தன.
இந்நிலையிலேயே, சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜூன் 14ஆம் திகதி வரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் வேகமாக பரவும் மூன்றாவது அலைகளைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் கட்டுப்பாடு போதுமானதாக இருக்காது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் வைரஸ் பரவுவதைக் குறைக்கவேண்டுமாயின் 21 நாள்கள் தடையில்லா சுழற்சி கட்டாயமாக அமுல்படுத்தவேண்டுமென சுகாதார நிபுணர்கள் கோரியிருந்தனர்.
14 நாள்கள் கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லையென சுகாதார நிபுணர்கள் பலரும் கவலைத் தெரிவித்தனர். அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அதிருப்தி கொண்டிருந்தது.
அதுமட்டுமன்றி, 21 நாள்கள் தடையில்லா சுழற்சி முறையிலான கட்டுப்பாடுகளுக்கு
சுகாதார அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.