21 விமான விவகாரம்; கோப் குழு வழங்கிய பரிந்துரை
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான கொள்வனவு செயன்முறையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் அடிப்படையில் முழு கொள்வனவின் செயன்முறையையும் மறுபரிசீலனை செய்யுமாறும் அக்குழு கூறியுள்ளது.
செயன்முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும் சுற்றுலா அமைச்சு மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு கோப் குழுவின் தலைவர் டொக்டர் சரித ஹேரத் எம்.பி. அறிவுறுத்தியுள்ளார்.
கொள்வனவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அந்தந்த கொள்வனவு செயன்முறை அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிக்காக விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் ஊடாக சமர்ப்பிக்கப்ப வேண்டும் என்றும் கோப் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில் தம்மிடம் 24 விமானங்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், உடனடியாக விமானங்களைக் கொள்வனவு செய்ய முடியாது என்பதால், தேவையான செயன்முறையை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தைக் காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த செயல்முறையை முடிக்க சுமார் 6 முதல் 12 மாதங்களாகும் என்றும், அது அமைச்சின் ஊடாக வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் விமான நிறுவன தலைவர் கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.