2027 ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மாற்றம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்ட முதலாவது ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடருக்கான கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

சீர்திருத்தங்கள்
ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் நடைபெறவுள்ளன.
இத்தொடர் இருபதுக்கு 20 போட்டிகளாக விளையாடப்படவுள்ளது.
இத்தொடர் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இத்தொடர் தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை ஐசிசி தனது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் கீழ் பரிசீலித்த பின்னரே, மாற்றீடாக இந்தியாவைப் பரிந்துரைத்தது.
இந்த முடிவை செப்டம்பர் 1ஆம் திகதி ஐசிசி நிர்வாகக் குழு உறுதி செய்தது என ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.