2 மில்லியன் ரூபாய் நிதி மோசடி; இருவர் அதிரடி கைது!
வவுனியா - மதவாச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகர் ஒருவரைத் தொடர்பு கொண்டு எண்ணெய் மற்றும் டீசல் விநியோகத்திற்கான சட்டப்பூர்வ விலைமனுக்கோரல் பெற்று தருவதாக கூறி 2 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த இருவர் நேற்று (ஜன 30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி சந்தேக நபர்கள் 2 மில்லியன் ரூபாய் பணத்துடன் பூனேவ கடற்படை முகாமிற்கு அருகில் தம்மை சந்திக்குமாறு வர்த்தகருக்கு அறிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் கடற்படை முகாமுக்கு அருகில் வந்த போது சந்தேக நபர்கள் தங்களை கடற்படை அதிகாரிகளைப் போல அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் லொறியில் சென்றிருந்த வர்த்தகர் மற்றும் அவரது உறவினரின் தேசிய அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடற்படை முகாம் நுழைவாயிலில் நுழைவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் போர்வையில் சந்தேகநபர்கள் நுழைவாய்க்குள் அருகில் சென்றுள்ளதுடன் பிரதான சந்தேகநபருடன் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய நபர் வர்த்தகரிடம் இருந்து 2 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை பின்தொடருமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
லொறிக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர்கள் கடற்படை முகாமின் நுழைவாயிலுக்குள் செல்வதை தவிர்த்து வேறு திசையை நோக்கி வாகனத்தை செலுத்தி தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது லொறி சாரதி சந்தேக நபர்களை துரத்தியுள்ளதோடு அதே நேரத்தில் சந்தேக நபர்களை பூனவே பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்துமாறு பொலிஸாரினால் சைகை காண்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனை மீறி சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் பணத்துடன் மதவாச்சி, இக்கிரி கொல்ல பாடசாலைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடைய இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஒருவர் இராணுவ சாரதி ஆவார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி மற்றும் பூனேவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.