16 வயது சிறுமி கடத்தப்பட்டாரா...மாமியார் வீடு சென்றவருக்கு நடத்தது என்ன?
தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் இன்று காலை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக காணாமல் போன சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரது முறைப்பாட்டில் ,
தனது 16 வயதுடைய மகள் சாமிமலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் தனது மாமி வீட்டில் இரவு தங்கி இருந்த நிலையில் தானும் தன் மனைவியும் தோட்ட பணிக்கு சென்றிருந்த வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வேன்
மகள் பெயர்லோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டு வரை கல்வி பயின்றுள்ளதுடன் அதன் பின்னர் நோய் ஏற்பட்ட காரணத்தால் இடை நடுவில் படிப்பை நிறுத்தியுள்ளார்.
மகள் இரவு நேரத்தில் தனது மாமியார் வீட்டில் தங்குவதாகவும் வழக்கம் போல் தங்கள் இருவரும் பணி முடித்து வந்து பார்த்த போது மகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று காலை (04) சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றை அப் பகுதியில் கண்டதாகவும் அதில் இருந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வேன் , இலக்கம் PH.8233 கொண்ட வெள்ளை நிற சிறிய ரக வேன் என அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0522277222 எண் மூலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.