ரஷ்ய, உக்ரைன் போரில் கூலிப்படையாக சென்ற 16 இலங்கையர்கள் பலி; உறுதிப்படுத்திய அரசாங்கம்
ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று புதன்கிழமை (15) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஆட்கடத்தலுக்கான நடவடிக்கைகள்
ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு 011 240 1146 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு பிரிவு பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூல் ஊடாகவே இந்த ஆட்கடத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு அங்கு இராணுவத்தில் சிக்கியுள்ள சிப்பாயொருவருக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம், ரஷ்ய மொழில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்பனவும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எத்தனை பேர் சென்றுள்ளனர் என்பது குறித்த துள்ளியமான தகவல்கள் எவையும் எமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
அத்தோடு இது தொடர்பில் தகவல் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.