இலங்கையில் சிக்கிய பெருந்தொகை வெளிநாட்டவர்கள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சிலாபம், அம்பகதவில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாரிய கணினி குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

150 வெளிநாட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்களில் 129 சீன ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் வியட்நாமை சேர்ந்த 10 ஆண்கள் மற்றும் 3 பெண்கள், தாய்வான் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 99 கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 நவீன ரக கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இவை அனைத்தும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வெளிநாட்டவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அம்பகதவில பகுதியில் உள்ள இந்த விடுதிக்கு வந்து தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிதி மோசடி
இவர்களின் நடமாட்டம் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இவர்கள் விடுதிக்குள்ளேயே முடங்கியிருந்து சர்வதேச ரீதியிலான கணினி மோசடிகள் அல்லது நிதி மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டு, மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.