வழிப்பறி கொள்ளை; நீண்டகாலம் ஓடி ஒளிந்த சந்தேக நபர் சிக்கினார்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கைதான சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் மற்றும் சங்கிலிகளை விற்பனை செய்ய உதவிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பதுவத்த, ராகம, கந்தானை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28- 42 வயதிற்கிடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதான சந்தேக நபருக்கு எதிராக மஹர, கம்பஹா, வெலிசறை மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.
அதேசமயம் சந்தேக நபரை கைது செய்ய வெலிசர மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதானவரிடமிருந்து 34 கிராம் தங்கமும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.