15 பேர் கூர்மையான ஆயுதங்கள் , போதைப்பொருளுடன் கைது
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 15 சந்தேகநபர்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் மற்றும் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தால் இன்று (21) காலை ரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள வீடமைப்புத் தொகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து செயற்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆல்டோ தர்மய என்ற 'எல்லாவல தர்மசிறி பெரேரா மற்றும் குருவிட்ட ஆராச்சிலாகே கவிந்து தனஞ்சய' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுள் பெண் ஒருவரும் உள்ளடங்குவதோடு, அவர்கள் அனைவரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.