இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று (30) அதிகாலை சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா
இவர்கள் அனைவரும் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, அனுராதபுரம் பகுதியில் தங்கியிருந்து கணினித் துறையில் சட்டவிரோத தொழில் புரிந்து வந்துள்ளனர்.
கடந்த 17-ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர், விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இன்று அதிகாலை அவர்கள் அனைவரும் விமானம் மூலம் மீண்டும் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.