இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 104 ரோஹிங்கியா அகதிகள்!
இலங்கையின் வடக்கு கடல் பகுதியில் 104 ரோஹிங்கியா அகதிகளுடன் தத்தளித்து வந்த படகினை உள்ளூர் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளது.
மியான்மரில் நிலவும் வன்முறை சூழல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் தாங்கொண்ணா நிலைக் காரணமாகவும் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைவது தொடர் கதையாகியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் இந்திய பெருங்கடல், பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் படகு தத்தளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கை, கடற்படையின் கூற்றுப்படி,
104 பேரும் மியான்மரில் இருந்து இந்தோனேசியாவில் தஞ்சமடையும் நோக்கத்துடன் சிறிய படகில் வெளியேறியிருக்கின்றனர்.
படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் திசைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த 104 பேரில் 39 பேர் பெண்கள் 23 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு 80 வயது முதியவர், ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் சிறு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் காங்கேசன்துறையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் இருந்து யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மியான்மரில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவ ரீதியான தாக்குதல்கள்/அரச அடக்குமுறைகள் காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்திய பெருங்கடல் வழியாக இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரினர்.
அண்மையில், இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதும் பலர் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில், திசைமாறிய ரோஹிங்கியா அகதிகள் படகு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.