பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோயில் நிலத்தில் புதைக்கப்பட்ட 100 பெண்கள்; பகீர் கிளப்பிய சம்பவம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்கள் கொலை செய்யப்பட்டு கோயில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா பெல்தங்கடி தாலுகாவில் உள்ள பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவிலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை
புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கோயில் முன்னாள் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி புகைப்பட ஆவணங்களுடன் முறைப்பாடு கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு நீதிமன்றில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.
கொலை செய்யப்பட்ட உடலங்களை இரகசியமாகப் புதைக்குமாறு தன்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஊழியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கோயிலின் முன்னாள் ஊழியரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.