10 நிமிட ஆய்வு; தமிழக முதல்வரால் பரபரப்பான பொலிஸ் ஸ்டேஷன்!
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் தருமபுரிக்கு பயணித்தார்.
இதன்போது அவருக்கு அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் , திடீரென அதியமான் கோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் முதல்வரின் கார் சென்றது.
காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், பொலிஸ் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இதன்போது, பொது நாள்குறிப்பு, தினசரி பணிப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த முதல்வர், செப். 28 அன்று பெறப்பட்ட புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், முதல்வர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும், முதல்வருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வாரவிடுப்பு சரியாக அமல்ப்படுத்தப்படுகிறதா என்பதையும் பொலிசாரிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின் சுமார் 10 நிமிட ஆய்வை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.