மின் கட்டணம் செலுத்துவதாக கூறி 10 கோடி மோசடி!
மின்சார கட்டணம் செலுத்துவதாக கூறி 10 கோடி ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் கசினோ விளையாட்டுகளுக்கு தீவிரமாக அடிமையான 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல கசினோ நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர்
கைதானவர் இராணுவ விசேட அதிரடிப் படையில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கசினோவிற்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலட்சக்கணக்கான ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் குறிப்பிட்ட கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மூலம் செலுத்தினால் 20 வீதம் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் இணையம் மூலம் பணம் பெற்று மின்கட்டணத்தை செலுத்தியதை சரிபார்க்கும் வகையில் மின்சார வாரியத்தின் கட்டணத்தை இணையத்தினூடாக செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.
இதேவேளை, மின்சார சபையின் இணையதளத்திலும் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்க பட்டாலும் தரவு தளத்திற்கு பணம் மாற்றப்படவில்லை.
சுமர் 60 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும் அந்தப் பணத்தில் கசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.