109 தொலைபேசி இலக்கத்திற்கு 1,077 முறைப்பாடுகள் !
109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 1,077 முறைப்பாடுகளில் , 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் வழங்குவதற்கு, 109 என்ற அவசர தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அவசர தொலைபேசி
இந்நிலையில் ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவற்றில் 42 முறைப்பாடுகள் தொடர்பில், நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 8 முறைப்பாடுகள் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 550 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று முறைப்பாடுகள் வழங்க முடியாத சிறுவர்கள் மற்றும் பெண்கள் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இரகசியமாக முறைப்பாடுகளை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.