மூன்றாம் உலகப் போர் மூளுமா? உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பால் பதற்ற நிலை!
ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை மூன்றாம் உலகப் போர் மூளுமா என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது .
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, அந்நாட்டின் எல்லையில் இராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.
இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபிடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன.
இதனால், 3 ஆம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.