யாழில் மீனவர்கள் போராட்டத்தில் நடந்தது என்ன? சீறிய அமைச்சர் டக்ளஸ்!
யாழில் இடம்பெற்ற மீனவர்கள் போராட்டத்தின்போது மீனவர்களுக்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் தான் பேசாமல் திரும்பி சென்றதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
சுப்பர்மடத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றேன். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கத்திக் கூக்குரல் எழுப்பினாகள் . அங்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எதற்கும் பயந்தவன் அல்ல எனவும் அவர் கூறினார்.
அவர்களின் சுமுகமான தீர்வு வேண்டும் என்பதாலேயே கதைக்க சென்றேன். ஆனால் நான் பிரச்சினையை தீர்ப்பேன் என சொன்னதை ஏற்றுக்கொள்ளாது எழுத்துமூலம் கேட்டனர். அந்த போராட்டத்திற்கு கிடைத்த முடிவு என்ன? நான் நினைத்திருந்தால் ஒரு சுண்டு விரலில் போராட்டத்தை முடித்திருப்பேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.
ஏனெனில் போராட சொன்னது நான்தான் . இழுவை படகுகள் வரலாம் என கடற்படைக்கு நான் நினைத்தால் சொல்லலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் என்னை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்த அமைச்சர், இலங்கை அரசும் இந்தியவுடன் முரண்பட தயாராக இல்லை. முரண்படவும் மாட்டாது. மீனவர்கள் மதுபோதையில் நிற்கிறார்கள் என சொன்னது உண்மைதான்.
அவர்கள் வீம்புக்கு வந்தால் அவர்களது உடம்பு நொந்துவிடும் என்பதற்காகவே தான் அங்கிருந்து வெளியேறியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.