வித்தியசமான முறையில் திருமணத்தை நடத்தும் ஜோடி! ஒரு சுவாரஸ்ய பதிவு
மேற்குவங்கத்தில் ஒரு ஜோடி தங்களின் திருமணத்தை ஒன்லைன் மூலமாக நடத்தவுள்ளதாக வெளியாக தகவல் பெரும் வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாண்டிபென் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் இன்னும் சில தினங்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்தத் திருமணம் தான் இணைய உலகின் இன்றைய ட்ரெண்டிங். கொரோனா பரவல் காரணமாக விருந்தினர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்க முடியும் என்பது போன்ற திருமணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்த சர்கார் – அதிதி தாஸ் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இரண்டாம் அலையின்போதே இவர்களின் திருமணம் நடக்கவிருந்துள்ளது. ஆனால், அப்போதும் இந்தக் கட்டுப்பாடுகளால் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளனர்.
நிலைமை சீராகும் என காத்திருந்தவர்களுக்கு கொரோனா மூன்றாம் அலை மேலும் சிக்கலை கொடுத்தது. என்றாலும், இந்த முறை திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்கள்.
வரும் 24-01-2022 ஆம் திகதி திருமணத்தை நடத்தவுள்ள இவர்கள் இதற்காக 100 பேரை மட்டுமே நேரில் பங்கேற்க அழைத்துள்ளனர்.
அதேநேரம், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 350 பேரை கூகுள் மீட் மூலம் திருமணத்தில் கலந்துகொள்ள இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த 350 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள். கூகுள் மீட் மூலம் கலந்துகொள்ளும் இந்த 350 பேருக்கும் Zomato மூலம் உணவு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த ஏற்பாடு தொடர்பாக மணமகன் சர்கார் பேசுகையில், “எனக்கு சில நாட்கள் முன்பு கொரோனா பாதிப்பு இருந்தது. கடந்த 10-01-2022 ஆம் திகதிக்கு பிறகே கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தேன்.
எனவே தான் திருமணத்துக்கு வெளியூரில் வரும் விருந்தினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்லைன் திருமணம் என்கிற முடிவை எடுத்தோம்.
முதலில் இந்த முடிவை சொன்னபோது அனைவரும் சிரித்தனர். அந்த சிரிப்புதான், நாம் ஏன் இதை ஒரு முன்மாதிரியாக செய்யக்கூடாது என்று என்னை யோசிக்க வைத்தது. எங்களது பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் முன்னிலையிலும் இப்போது எங்கள் திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருமணத்திற்கான அழைப்பிதழில் திருமணத்திற்கு மொய் செய்வதாக இருந்தால் ‘கூகுள் பே’ மூலம் செலுத்தி விடலாம் என்றும், பரிசுப்பொருட்களை அனுப்புவதாக இருந்தால் Flipkart மூலம் ஓர்டர் செய்து அனுப்பி வைக்கலாம் என்றும் அச்சிட்டுள்ளனர்.
ஒன்லைன் திருமணம் என்கிற முடிவு எடுக்க இவர்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சாண்டிபென் சர்கார், அதிதி தாஸ் இருவரும் ஒன்லைனில்தான் முதன்முதலில் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளனர்.
இப்போது அதே ஒன்லைன் மூலமாக திருமணமும் செய்யவுள்ளனர். இந்தச் செய்தி ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.