லொட்டரியில் பெருந்தொகை வென்ற பிரித்தானிய தாயாருக்கு நேர்ந்த கதி!
பிரித்தானியாவில் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயார் ஒருவர் லொட்டரியில் வென்ற தொகையை திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான எலைன் ஹிண்ட்லி (Elaine Hindley). தனது போதை மருந்து பழக்கத்திற்கு பணம் திரட்டுவதற்காக, உள்ளூரில் போதை மருந்து விற்பனையை முன்னெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2020 ஏப்ரல் மாதம், இரகசிய தகவலின் அடிப்படையில் இவரது வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார், போதை மருந்து பொட்டலங்களை கைப்பற்றியதுடன், அவரது குடியிருப்பை சோதனையிட அனுமதியும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையின் முடிவில், 2021 ஜூலை மாதம் அவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தாயார் எலைன் ஹிண்ட்லி சிறைக்கு செல்லும் முன்னர் லொட்டரியில் சுமார் 150,000 பவுண்டுகள் தொகையை பரிசாக வென்றுள்ளார்.
இந்நிலையிலேயே, அவர் லொட்டரியில் வென்ற தொகையில் சுமார் 49,550 பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, Elaine Hindley தமது போதை மருந்து விற்பனையால் 49,550 பவுண்டுகள் அளவுக்கு ஆதாயம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறித்த தொகையை அவர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாத காலத்தில் குறித்த தொகையை அவர் செலுத்த தவறினால், மீண்டும் 8 மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Elaine Hindley கைதாவதற்கு முன்னர் பொலிசார் நடத்திய தீவிர சோதனையில், அவரது கார் மற்றும் குடியிருப்பில் இருந்து 28,000 பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்தும், சுமார் 5,300 பவுண்டுகள் ரொக்கமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.