துபாய் விமான நிலையத்தில் மயிரிழையில் தப்பிய இரு விமானங்கள்
துபாய் விமான நிலையத்தில் இந்தியா புறப்படவிருந்த இரண்டு விமானங்கள் ஒரே ரன்வேயில் வேகமாக வந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து துபாய் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று (ஜனவரி 9ம் தேதி) துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்தன.
துபாயிலிருந்து ஹைதராபாத்துக்கும் (EK-524), பெங்களூருவுக்கும் (EK-568) புறப்பட தயாரான அந்த இரண்டு விமானங்களுக்கும் 30R என்ற ரன்வே ஒதுக்கப்பட்டது. இதில் துபாய் - ஹைதராபாத் விமானம் புறப்பட அனுமதி கிடைத்தவுடன், மிக வேகமாக ரன் வேக்கு சென்றது.
அப்போது அதே ரன்வேயில் மற்றொரு விமானம் (EK-568) ஓடுபாதையில் அதிக வேகத்தில் சென்று கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஹைதராபாத் விமானத்தை டேக் ஆஃப் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஹைதராபாத் விமானத்தின் வேகத்தை உடனடியாக குறைத்த விமானி, அந்த விமானத்தை ரன்வேயை ஒட்டிய taxiway N4 எனப்படும் விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்த உத்தரவிட்டதால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த விமானங்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இரண்டு விமானங்களுமே துபாயில் பதிவு செய்யப்பட்டவை என்பதாலும், இந்த சம்பவம் அங்கு நடைபெற்றதாலும், துபாய் விமான போக்குவரத்து ஆணையம் இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்தியா வரவிருந்த விமானங்கள் இச்சம்பவத்தில் தொடர்புடையவையாக இருந்திருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையமும் அந்த விசாரணை அறிக்கையின் நகலை கேட்டுள்ளது. எமிரேட்ஸ் விமானங்கள் இது போன்றதொரு சம்பவத்தில் சிக்குவது சமீப காலத்தில் இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 1977 மார்ச் 27ம் தேதி ஸ்பெயினின் Tenerife Los Rodeos விமான நிலையத்தில் இதே போல இரண்டு விமானங்கள் ஒரே ரன்வேயில் வந்து மோதிய சம்பவத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த 583 பயணிகள் உடல் கருதி பலியானது குறிப்பிடத்தக்கது.