திருகோணமலை மண்ணின் மகத்துவம் நிறைந்த இரு முத்துக்கள்! சுவாரஸ்ய பதிவு
ஐயா தம்பர் காசிநாதர் அம்மையார் ரெட்ணபூபதி காசிநாதர் தம்பதிகள் மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணித் தாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பெருமக்கள், தாங்கள் இம் மண்ணுக்கு வந்த பணியை பூரணமாக்கி மரணித்துக் கொண்டால், அவர்கள் என்றும் அந்த மண்ணில் வாழும் மக்களினாலும், அவர்கள் வம்சத்தவர்களினாலும், மறக்கப்படுவதில்லை.
திருகோணமலை நகரத்தில் மரணங்களுக்கு மகுடம் சூடி, மறைந்த உயிர்களுக்கு அஞ்சலி கீதம் பாடி, திருவாசகத்தோடு இறுதி வணக்கம் செலுத்தி, விடைகொடுத்து அனுப்பும் ஐயா காசிநாதர் என்ற சமூகத் தொண்டரையும் அவரது துணைவியார் கல்வித்தாய் ரெட்ணபூபதி காசிநாதரையும் இந்த சிவனடியான் என் இந்தப் பதிவில் மரியாதையுடன் ஆவணப்படுத்தி அழகு பார்க்கின்றேன்.

சமூக சேவையாளர் காந்தி ஐயா பற்றிய “திருமலை மண்ணின் மகத்துவம் நிறைந்த முத்துக்கள்” என்ற என் மூன்றாவது பதிவில், “ஐயா அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் திருகோணமலை நகரில் நடந்த அனைத்து மரணவீடுகளின் நிகழ்வுகளில் பேதமின்றி கலந்துகொண்டு காலம் சென்ற ஐயா காசிநாதரோடு திருவாசகம் பாடி சுடுகாடுவரை சென்று வழியனுப்பி வைக்கும் கர்ம யோகியாக வாழ்ந்தார் என்பதை அறியாதபலர் அறிந்து கொள்ள பதிவாக்குகின்றேன்” எனக் கூறி இருந்தேன்.
அந்தப்பதிவில் இந்தச் சிவனடியான் குறிப்பிட்ட அந்த ஐயா காசிநாதரே இந்தக் காசிநாதர் ஐயா என்பதை தெளிவுறக் கூறி அன்று காந்தி ஐயா பற்றி பதிவில் இந்தச் சிவனடியான் விபரித்துகூறாத விடயத்தை விளக்கிக் கூறி ஐயா காசிநாதர் பற்றிய பதிவை தொடர்கின்றேன்.
சங்கும் சேமக்கலமும் கொண்டு, இறந்தவர்களுக்கு விடை கொடுக்க, எங்கள் திருமலை மண்ணில் சாதி பேதம் பாராது எவரது அழைப்பும் இன்றி அவர் அறிந்து இவருக்கு அறிவித்து இவர் அறிந்து அவருக்கு அறிவித்து நேரமில்லை காலமில்லை எனத்தட்டிக் கழிக்காது அந்த காந்தி ஐயாவும் இந்த காசிநாதர் ஐயாவும் செய்த சேவையை எம் மண்ணில் இனி ஒருவரும் செய்துவிட முடியாது.
அத்தோடு இந்த காசிநாதர் ஐயா காந்தி ஐயாவை விட ஒரு படி மேலே சென்று வறுமையில் அல்லலுறும் சில குடும்பங்களுக்கு தன் சொந்தப் பணத்தில் அந்த மரணவீட்டு நிகழ்வுகள் நடை பெற உதவினார் என்பதுவும், இன்னும் பல குடும்பங்களுக்கு மரணவீட்டுக் கல்வெட்டு எழுதிக் கொடுத்தற்கும் பணம் பெற்றுக் கொள்ளாமலே பணியாற்றினார் என்பதுவும், ஐயா அவர்கள் திருகோணலை நகரத்து மக்களுக்கு ஆற்றிய மிகப் பெரிய சேவையாகும்.
ஐயா காசிநாதர் அவர்கள் பல்லாண்டு காலமாக செய்து வந்த இந்தச் சேவை எம் நாட்டில் நடந்த இனக்கலவரங்களில் சுடுகாட்டில் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்தும் இறந்தவர்களுக்கு தான் செய்துவந்த இறுதி மரியாதையை கைவிடாத ஐயா அவர்கள் தொடர்ந்தும் மடத்தடிச் சந்திவரை சென்று சிவபுராணம் பாடி இறுதிவிடை கொடுத்து வந்தார் என்பதோடு, அதனை தன் 83 வது வயதுவரை தொடர்ந்து செய்தார் என்பதனை அறியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த சிவனடியான் ஆவணப்படுத்துகின்றேன்.
காசிநாதர் ஐயா அவர்களும் அவரோடு ஆசிரியை பணி செய்த யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கதிரித்தம்பி ஆசிரியர், மற்றும் எங்கள் காந்தி ஐயா என மூவருமாக சேர்ந்து மூதூர் கிண்ணியா என்று எமது திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களில் பல பாடசாலைகள் உருவாக அன்று உழைத்தார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கின்றேன்.
அத்தோடு காசிநாத ஐயா அவர்கள் மரணித்தவர்களுக்காக மனிதாபிமான இறுதி விடை கொடுத்து, சிவபுராணம் பாடி அனுப்பிவைத்த சேவையைத் தாண்டி, எமது திருகோணமலை மன்ணில் பலர் தமது திருமண பந்தங்களில் இணைவதற்கும் காரணமாகி, அந்த சேவையையும் பணம் எதுவும் பெறாமலே செய்து வந்தார் என்பதையும் என் இந்தப் பதிவில் குறிப்பிட்டு காட்டுகின்றேன்.
இதற்கு எல்லாம் மேலாய் அளவெட்டி, நிலாவெளி, குச்சவெளி, ஆலையடிவேம்பு, தம்பலகாமம், திருகோணமலை, மட்டகளப்பு, எனப் பற்ப்பல இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய ஐயாவின் சிறப்பு யாதெனில், கிண்ணியா முஸ்லிம் தமிழர்களினது, கல்விக்கு ஐயா காசிநாதர் அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவையே ஆகும்.
ஐயா காசிநாதர் அவர்கள் 1945ம் ஆண்டு முதல் 1955ம் ஆண்டுவரை ஆசிரியராகவும் அதிபராகவும் இன்றைய கிண்ணியா மத்திய கல்லுரியில் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் கலவன் பாடசாலையாக இருந்த அந்தப் பாடசாலை, பின்னர் மகளீர் பாடசாலை மற்றும் ஆண்கள் பாடசாலையான போது, ஐயா காசிநாதர் ஆண்கள் பாடசாலையின் அதிபராகவும், அம்மையார் ரெட்ணபூபதி (திருமதி காசிநாதர்) மகளீர் பாடசாலை ஆசிரியராகவும் தங்கள் சேவையைத் தொடர்ந்தனர்.
பாடசாலை ஆரம்பித்து ஐயா ஆசிரியரான அன்றைய காலத்தில் அவரது கல்விச் சேவையை கொண்டு செல்வது அவ்வளவு இலகுவானதாக இருக்க வில்லை. காரணம் என்னவென்றால் தமிழ்க் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டாமல், தங்கள் மார்க்கக்கல்விக்கு முதன்மை கொடுத்து வாழ்ந்து, கிண்ணியாவில் வாழ்ந்த இஸ்லாமிய சமூகம், தமிழ் மொழிக்கல்வியை சைத்தானின் கல்வி என்ற கருத்தை நம்பி புறக்கணித்தது.
அக்கால கட்டத்தில் ஐயா காசிநாதரும், அம்மையார் ரெட்ணபூபதியும், அங்கு வாழும் முஸ்லிம்களில் படிக்கக் கூடிய பிள்ளைகள் இருக்கும் முஸ்லிம்களின் வீடு வீடாக சென்று கல்வியின் தேவையை அந்த மண்ணின் மக்களுக்கு உணர்த்தி மாணவ மாணவிகளை அழைத்து வந்து கல்வி அறிவூட்டி வராலாற்றில் தனி முத்திரை பதித்தனர்.
அத்தோடு ஐயா காசிநாதரின் சேவை இத்தோடு நின்று விடாது அங்கு தான் படிக்க அழைத்து வந்த எழை மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் ரொட்டியும் ரஸ்க்கும் கொடுத்து பசியாற்றிய பின் கற்பித்தார் என்ற செய்தியை அந்த கிண்ணியாவில் வாழும் மூத்த தலைமுறையினர் நினைவு கூருகின்றார்கள்.
என்பதோடு, தங்கள் ஊரில் எதாவது மரணவீடு நடந்தால் அந்த இஸ்லாமிய மக்களது இடுகாடு வரை சென்று இறுதி மரியதை செலுத்தி முடிந்ததும் இறந்தவர்களின் வீடு சென்று அங்கிருக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதையும் வழக்கமாக கொண்டு இருந்தார் என்பதையும் நினைவுகூருகின்றார்கள்.
திரு திருமதி காசிநாதர்களின் இந்த மகத்தான சேவையினால் கிண்ணியாவில் வாழ்ந்த மூஸ்லீம்கள் பலர் பாடசாலை அதிபர்களாகவும் கல்வித்திணைக்களத்தின் வட்டாரக்கல்வி அதிகாரிகளாகவும் கவிஞர்களாகவும் கல்வியில் மேலோங்கி இருக்கின்றனர் என்பதையும் என் இந்தப்பதிவில் ஆவணப்படுத்தின்றேன்.
சமூகப்பணி, கல்விப்பணி என்பதோடு நின்றுவிடாமல் ஐயா அவர்கள் தன் ஆன்மீகப் பணியாக, வீரகத்திபிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையிலும், திருக்கோணேஸ்வர ஆலயப் பரிபாலன சபையிலும், பலகாலம் இருந்து சேவையாற்றினார் என்பதோடு கிண்ணியாவில் பிள்ளையார் கோவில் அமைத்து தன் ஆன்மீக தொண்டிலும் பூரணகவனம் செலுத்தினார் என்பதையும் பதிவு செய்கின்றேன்.
யேசுநாதரைக் கண்ட காசிநாதர் என்று திருகோணமலையில் வாழ்ந்த பலராலும் அழைக்கப்பட்ட ஐயா அவர்கள் யேசுவின் கிருபையையும் சிவனின் அன்பையும் தான் வாழும் காலத்தில் சமூகத்திற்கு கொடுத்தார் என்பதை இந்த சிவனடியான் என்கருத்தாக பதிவுசெய்து எனது ஆசிரியர்களான மரியாதைக்குரிய திரு திருமதி திருச்செல்வம் அவர்கள்,
ஐயாவின் மருமகன் மற்றும் மகள் ஆனதால், ஐயா காசிநாதரையும் அம்மையார் ரெட்ண பூபதி காசிநாதரையும் இந்த சிவனடியான் சிறுவனாக அருகில் இருந்து காணும் வாய்ப்புப் பெற்றதில் அகம் மகிழ்ந்து அந்த மகத்தான ஜீவன்கள் இருவருக்கும் என் இந்த பதிவை சமர்ப்பணம் ஆக்குகின்றேன். என மூகநூலில் சுவாமி சங்கரானந்தா என்பவர் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.