பஞ்சபூத தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் திருவண்ணாமலை சிவன் கோவில்; பிரம்மாண்டமானது எப்படி!
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் தமிழகத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆலயம், 2ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை பிரம்மாண்டமானது எப்படி என்பது தொடர்பில் பல அரியதகவல்களை அறிந்துகொள்வோம்.
பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியன பஞ்ச பூதங்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து சிவபெருமான் ஆலயங்கள் அமைக்கப் பெற்றுள்ளது.
அதாவது திருவாரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவன் ஆலயம் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்வி தலம் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் நீரை மையமாகக் கொண்ட அப்பு ஆலயம் அமைந்துள்ளது.

அதேபோன்று ஆகாயத்தை மையமாகக் கொண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தையும் வாயுவை மையமாகக்கொண்டு காலஹஸ்தி ஆலயத்தையும் வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். அவ்வகையில் நெருப்பு ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
சிவனின் அக்னி அவதாரம் அக்னி ஸ்தலம் என்று கூறப்படும் திருவண்ணாமலைக்கு தான் வருடாவருடம் மக்கள் கிரிவலம் செல்கின்றனர். இங்கு அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை கட்டி முடிக்க ஆயிரம் ஆண்டுகள் ஆனதாக ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சிவபெருமான் ஒருமுறை அக்னி அவதாரம் எடுத்திருந்த சமயத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் இடையே போட்டி ஒன்று ஏற்பட்டது. அவர்கள் இருவரில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க சிவனின் அடியையும் முடியையும் தேடி பயணித்தார்கள்.

விஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் அடியைத் தேடி பூமிக்கு அடியில் செல்ல பிரம்மதேவர் அன்னப் பறவையாக மாறி சிவனின் முடியைத் தேடி ஆகாயத்திற்கு பறந்தார். பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழம் சென்றாலும் சிவபெருமானின் அடியை கண்டுபிடிக்க முடியாததால் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் பிரம்மர் முடியை பார்க்கவில்லை என்றாலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் சிவபெருமானின் தலையில் இருந்து கீழே விழுந்த தாழம்பூவை சிவனின் முடியை பிரம்மதேவர் தொட்டுவிட்டதாக பொய்சாட்சி கூறுவதற்கு அழைத்து வருகிறார்.
இதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது பூஜையில் தாழம்பூ வுக்கு இனி இடமில்லை என்றும் பிரம்ம தேவருக்கு இனி பூஜைகள் நடக்கக்கூடாது என்றும் சபித்ததாக புராண கதைகள் கூறுகின்றன.
இந்த சம்பவங்கள் முடிந்தபிறகு அக்னி அவதாரத்தில் இருந்த சிவபெருமான் மலையாக மாறியுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய மலையை எப்படி சுற்றி வணங்குவது, இதற்கு எப்படி மாலை அணிவிப்பது என்று பிரம்ம தேவரும் விஷ்ணுவும் கேட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவபெருமான் சுயம்புலிங்கமாக அவதாரம் மாறியதாக புராணங்களில் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கோவில் கட்டப்பட்டது எப்படி?
இரண்டாம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை ஆலயம் மண் சுவரால் கட்டப்பட்டதாக தான் இருந்தது. அதிலும் மலையடிவாரத்தில் ஒரு சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. அந்த கோவிலின் கருவறை நான்காம் நூற்றாண்டில் சோழர்களால் செங்கற்கள் வைத்து கட்டப்பட்டது. அதன் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் சிறிய கோவிலாக உருவெடுத்தது. இவை அனைத்தும் பல்லவர்கள் ஆட்சி செய்த காலத்தில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கருங்கற்களால் ஆன கருவறை:
அதன் பிறகு 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவபெருமானின் புகழை பாடியுள்ளனர்.
தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி புரியும் இடங்களில் 9ஆம் நூற்றாண்டில் தான் ஏராளமான சிவன் கோவில்கள் கட்ட தொடங்கினார்கள். அவ்வகையில் 817 ஆம் வருடம் முதலாம் ஆதித்த சோழன் திருவண்ணாமலையில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறையை கருங்கற்களால் கட்டிக் கொடுத்துள்ளார்.

உண்ணாமலை சன்னதி :
அதன் பிறகு முதல் பிரகாரமும் இரண்டாம் பிரகாரமும் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் முதலாம் ராஜேந்திர சோழன் கொடிமர கோபுரத்தையும் கோவிலின் சுற்று சுவரையும் கட்டியுள்ளார். 1063 ஆம் வருடம் கிளி கோபுரம் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இது கோவிலுக்கு தனி அழகை கொடுத்தது.
அதன் பிறகு அண்ணாமலையாரின் மனைவி உண்ணாமலைக்கு 12ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் சன்னதி அமைக்கப்பட்டது. 1340 முதல் 1374 ஆம் வருடத்திற்கு இடைப்பட்ட காலங்களில் மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரங்கள் கட்டப்பட்டது.
பின்னர் திருவண்ணாமலை கோவில் 15 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்றதாக மாற ஏராளமானோர் நன்கொடை, சொத்துக்கள் போன்றவற்றை கொடுக்கத் தொடங்கினர். 24 ஏக்கர் பரப்பளவில் திருவண்ணாமலை கோவில் நிலம் விரிந்து உள்ளது என்றால் அதற்கு பதினைந்தாம் நூற்றாண்டில் நிலங்களை மக்கள், குறுநில மன்னர்கள் ஆகியோர் நன்கொடையாக அளித்தது தான் காரணம் என்று கூறலாம்.
கோவிலின் அமைப்பு:
இந்த அருணாச்சலேஸ்வரர் ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் ஆறு பிரகாரங்களுடன் 9 ராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ளது. அங்கு 142 சன்னதிகளும் 22 பிள்ளையாரும் ஆயிரம் கால் மண்டபமும் அமைந்துள்ளது.

எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மை:
திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும் . திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இன்றும் திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.
ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.
திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும்.
புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும்.
சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும்.
அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும்.
குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு என்றும் சொல்லபடுகின்றது.