மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனல் மின்நிலையங்களுக்கு தேவையான உராய்வு எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாளைமறுதினம் முதல் இரவு வேளைகளில் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகம் கட்டம் கட்டமாக துண்டிக்கப்படும்.
மின் விநியோகத்தை துண்டிக்கும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் நாளை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்தார்.
மின் தடை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும்: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மின் உற்பத்தி மற்றும் மின்விநியோக நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான மின்நிலையங்களின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரதான மின்நிலையங்களின் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால் நாளைமறுதினம் முதல் 183 மெகாவாட் மின் உற்பத்தியை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்கு இணைத்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படும்.
தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் நாளைமறுதினம் முதல் இரவு வேளைகளில் நாடு தழுவிய ரீதியில் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிடும். மின்விநியோகம் துண்டிக்கப்படும் முறைமை மற்றும் நேரம் ஆகிய விடயங்கள் நாளை அறிவிக்கப்படும்.
இந்நிலையில், உராய்வு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக நாளைமறுதினம் முதல் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ள நிலையில் நாளையும், நாளைமறுதினமும், மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.