புத்தளத்தில் இடம்பெற்ற ஏலத்தில் இந்திய படகுகள் விற்பனை!
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தபோது கைப்பற்றப்பட்ட 4 இந்திய படகுகள், புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தபோது கைப்பற்றப்பட்டு கற்பிட்டி ஆணவாசல் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவப்படகுகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு படகுகளும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்த படகுகள் ஏல விற்பனைக்கு யாழ்ப்பாணம், குருணாகல், வாரியாப்பொல உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கு மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இவ்வாறு படகுகளை கொள்வனவு செய்ய வருகை தந்தவர்கள் கற்பிட்டி ஆணவாசல் கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டதுடன், குறித்த நான்கு படகுகளையும் ஏலத்தில் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்திய படகுகள் நீருக்குள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் பாவனைக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளதாக வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.
பழுதடையும் முன்னர் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்திருக்கலாம். அத்துடன் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்தாலும் அது எமக்கு பிரயோசனத்தைக் கொடுத்திருக்கும்.
இப்போது இந்த படகுகளால் எந்த பிரயோசனமும் இல்லை. படகுகளை பிரித்து பழைய இரும்புக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும் படகு கொள்வனவு செய்ய வருகை தந்த கொள்வனவாளர்கள் மேலும் தெரிவித்தனர்.