இப்போது ஜனாதிபதியாக நான் இருந்திருந்தால் இதைதான் செய்திருப்பேன்? ரணில்
நாட்டின் தலைவராக நான் தற்போதைய சூழலில் இருந்திருந்தால் ஒரே தடவையில் அனைத்து நாடுகளுடனும் முரண்பட்டிருக்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (11-01-2022) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனாதிபதி தற்போது நான் இல்லை. ஆனாலும் என்ன செய்ய வேண்டும் என்பதனை நான் கூறியிருக்கின்றேன். தற்போது நாட்டின் ஜனாதிபதியாக நான் இருந்திருந்தால் அதனை தான் செய்திருப்பேன்.
2019ஆம் ஆண்டு நாம் பொருளாதாரத்தை சீர் செய்திருந்தோம். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பொருளாதாரம் அவ்வளவு வீழ்ச்சி அடையவில்லை. கொரோனா நிலைமைக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சலுகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் டொலர் கையிருப்பை நாம் எவ்வாறு பெற்றுக் கொள்வது. மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என அதனை மூடிவைக்க முடியாது. அது தோல்வியடையும். குறிப்பாக நாணய பரிமாற்றத்தைப் பெற்றுக் கொண்டு பயணிக்க முடியாது.
இதேவேளை, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் மேலும், 229 பில்லியனைப் பெற்றுக் கொண்டனர். அதில் எவ்வித அர்த்தமும் இல்லை. திருகோணமலை எண்ணெய்க் குதங்களை வழங்கி அதனை அபிவிருத்தி செய்து கிழக்கு இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கியிருக்கலாம். அதனை செய்யவில்லை.
இருப்பினும், கொழும்பு கிழக்கு முணையத்தை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் மூலம் எமக்கு நிதி கிடைத்திருக்கும். அடுத்ததாக எல்என்ஜி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் அங்கு எல்என்ஜி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் ஒரு பில்லியன் கிடைத்திருக்கும்.
அத்துடன் மத்திய அதிவேக வீதி எம்சிசி இவையனைத்திற்கும் பணம் இருந்தது. அத்துடன் நான் இருந்திருந்தால் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒரே தடவையில் முரண்பட்டிருக்க மாட்டேன் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.