இலங்கை மக்களின் பரிதாப நிலை! ஐ.நா வெளியிட்ட பகீர் தகவல்
நாட்டில் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்த குடும்பங்கள் உண்ணும் உணவை குறைத்து கொண்டுள்ளதாகவும், சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்பதாகவும் ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் உள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலை என்பன எதிர்மறையான தாக்கத்திற்குள்ளாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனம் தனது சர்வதேச தகவல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை ருபாயின் வீழ்ச்சி எரிபொருள் நெருக்கடி, உரநெருக்கடி போன்றவற்றால் உருவாகியுள்ள பணவீக்கம் காரணமாக பல குடும்பங்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவை குறைத்துக் கொண்டுள்ளன.
இலங்கையில் அரிசியின் விலை செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகரித்தது, டிசம்பரில் ஓரளவு நிலையாக காணப்பட்ட பின்னர் மீண்டும் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
ஜனவரியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு விலைகள் உயர்ந்தன. முன்னைய வருடங்களை விட 50 வீதம் உயர்ந்துள்ளன. இறக்குமதி செய்யப்படும் அடிப்படை உணவுப்பொருட்களின் விலைகளும், செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளன.
உள்ளுர் சந்தையில் அடிப்படை உணவுப்பொருட்கள் மக்களிற்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான விலைகளை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறுகிய காலத்திற்கு பலனளித்தன.
எனினும், ஒக்டோபரில் இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்ததால், இந்த முயற்சிகள் பாதிக்கப்பட்டன. விலைகள் மீண்டும் அதிகரித்தன என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.