ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி: தடுமாறிய 3 அமைச்சரவை பேச்சாளர்கள்
இறக்குமதி செய்யப்படவுள்ள சீன அரிசி , சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு , 'உண்மையாகவே அது குறித்து தெரியாது' என்று அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் (Bandula Gunawardane) வினவுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
'சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதா?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும (Dullas alahaperuma) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இது தொடர்பில் கேட்டறிந்து அது குறித்து தெரியப்படுத்துவோம்.
இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.