மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிற்கு ஆப்பு வைப்பதில் பிள்ளையான் தீவிரம்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரனை மீண்டும் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாநகரசபை கட்டிடத்தொகுதியில் கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7மணி வரை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவனுக்கும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் [பிள்ளையான்] இடையில் இடம்பெற்ற திடீர் சந்திப்பினை அடுத்தே இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற திடீர் சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கும் மாநகர சபை ஆணையாளருக்கும் இடையிலான உள்ளக கருத்து முரண்பாடுகள் காரணமாக நகர அபிவிருத்தி பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும், இதன்காரணமாக மாநகர சபையின் பல்வேறுபட்ட பணிகளில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இவ்வருட முற்பகுதியில் ஆணையாளரை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் நேரடி தலையீடு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டு கடந்த 2020 டிசம்பர் மாதம் 7ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.