பாணந்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ; மேலுமொருவர் கைது
பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் பாணந்துறை ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து, உணவு மற்றும் நிதி உதவி மற்றும் உளவு பார்த்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அன்று, சந்தேக நபர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உளவு பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியின் சாரதி மீது அண்மையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
சாரதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததும், போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கிடையிலான உள்ளக மோதலே துப்பாக்கிச்சூடு வரை வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை சம்பவ தினத்தன்று சாரதி வருவதை உளவு பார்த்து வெளிநாட்டில் உள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரருக்கு தகவல் வழங்கிய இளைஞரே தற்போது கைதாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், சந்தேகநபர்கள் மறைந்திருந்த போது அவர்களுக்கு உணவும் பானமும் வழங்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் மறைந்திருந்த கடத்தல்காரரின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு 65,000 ரூபா பணமும் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து 8 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கு உதவியாக இருந்த மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.
அதேவேளை பாணந்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.